Saturday, January 06, 2007

நவீன கவிதைகள் - என் பார்வையில்

‘கவிதைகள்’ என்றவுடனே நம்மூளை ஏற்கனவே பல நிகழ்வுகள் நமக்குள் பதித்துச்சென்ற தடத்தை கையிலெடுத்துக்கொண்டு காத்திருக்கும். ‘மடக்கி மடக்கி எழுதப்படிருக்கும்’, ‘எதுகை மோனை இருக்கும்’, ‘சந்தம் இருக்கும்’, ‘ஓசைநயம் இருக்கும்’ என்றெல்லாம் ஞாபகங்கள் அலைமோதும். இந்நினைவுகளோடு நவீன கவிதைகளை உள்வாங்க முனைந்தால், அவற்றைப் பற்றிய உண்மை அறிதலைப் புறந்தள்ளி, தாக்குதல் தொடுக்கவோ, தள்ளிவைக்கவோதான் தயாராவோம்.

அந்த அளவுகோல்களைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுப்பார்த்தால் புதுக்கவிதைகளை நாம் புரிந்துகொள்ள முடியும். புரியாதது போலத் தெரிந்து பின் புரிய ஆரம்பிக்கும் போது புதுப்புது அர்த்தங்கள் தந்து ஒரு புது அனுபவத்தைத் தரும். அந்தச் சுகானுபவம் சிந்தனைத்தூண்டலாகி வாசகனைப் படைப்பாளியாக்கும் சாத்தியங்களும் உண்டு.

நவீனகவிதைகளைப் பற்றிப் பேசும் போது, ‘படிமம்’ என்றொரு பதத்தைப் பயன் படுத்துகிறார்கள். உருவகங்களைத்தான் படிமம் என்கிறார்கள். எல்லா உருவகங்களும் எடுபடுவதில்லை. சில படிமங்கள் அற்புதமாக இருக்கின்றன. சில நவீன கவிதைகள் வெறும் உருவகக்குவியலாக இருக்கின்றன. நவீன கவிதைகளின் வடிவத்தைப் பார்க்கின்ற போது பலர் பல உத்திகளைக் கையாள்கிறார்கள். வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற போது சில நேரங்களில் கருத்து காலை வாரி விடுவதுண்டு.
உணர்வுகளால் உந்தப்பட்டு கவிதைகள் உருவாக வேண்டும். படைப்பாளிக்கு கலைநயம், மொழிஅழகு, உருவம் பற்றிய பிரக்ஞை இருக்க வேண்டும். அப்படி உருவாகும் கவிதைகள் தாக்கங்களை ஏற்படுத்தும்.