Wednesday, January 17, 2007

மனம்

கட்டுப்பாடின்றி
தாவித்திரியும் குரங்கு!

விசா இல்லாமலே
வெளிநாடு செல்லும் கள்ளக்குடியேறி!

ஊர்தி இல்லாமலே
உலகம் சுற்றும் சுதந்திரப்பறவை!

குப்பைகள் போடும்
குப்பைத்தொட்டி!

நிர்வாணங்களை
நினைத்துப் பார்க்கும்
திருட்டுப்பயல்!

அந்தரங்கங்களை
ஆராயும் விஞ்ஞானி!

முகத்தில் ஒன்றும்
அகத்தில் ஒன்றுமான
மனிதனுக்குள் மனிதன்!

கனவில் மிதந்து
கற்பனையில் திளைக்கும் கவிஞன்!

உள்ளங்களை
ஊடுருவிப் பார்க்கும்
புற ஊதாக்கதிர்கள்!

கணக்கின்றிக்
கவலைகள் சுமக்கும் கழுதை!

ஒரு நிலையின்றித் தள்ளாடும்
குடிகாரன்!

உருவமின்றி அருவமாய்
ஆட்டிப்படைக்கும்
காட்டுமிராண்டி!

நினைவுகள் சுமந்து
நித்திரை இழக்கும்
இரவுச்சூரியன்!

அனுபவம் பெற்று
அமைதியாய் ஒருநாள்
அடங்கும் ஞானி!

கட்டுப்படுத்தி
குப்பைகள் அகற்றி
குணங்கள் சேர்த்தால் கடவுள்!

Labels:

Thursday, January 11, 2007

தமிழில் ஏராளமான காப்பியங்கள் உள்ளன!!

தமிழில் ஏராளமான காப்பியங்கள் உள்ளன!!
------------------------------------------------------
பொன்னும் மணியும் முத்தும் இரத்தினமும்
மின்னும் வைரமுமாய் எத்தனையோ? - எம்தமிழில்
கொட்டிக் கிடக்கிறதே காப்பியங்கள்! ஆதலினால்
தட்டுங்கள் நற்றமிழை இன்று!

Labels:

"தாய்த்தமிழ்"

மிகவும் பழமையானது தமிழ்!!
-------------------------------------
முத்தமிழே மூத்த மொழிகளிலே முன்னவளே!
சித்திரமே! தித்திக்கும் தேன்மொழியே! - என்றும்
அதிபதியே! அற்புதமே! எம்தமிழ்போல் இங்கே
புதியதுவும் உண்டோ புகல்?

Labels:

Wednesday, January 10, 2007

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் நூல் வெளியீடு - அழைப்பிதழ்

பிரபல எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரின் 4 நூல்கள்
பின்சீட் - சிறுகதைத் தொகுப்பு
வாழ்ந்து பார்க்கலாம் வா - நாவல்
பெருஞ்சுவருக்குப் பின்னே- சீனப்பெண்கள் வரலாறு
நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு

வருகிற 21 ஜனவரி 2007, ஞாயிறு மாலை 5 மணிக்கு
சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் வெளியீடு காண்கின்றன.

சிறப்புரை : திரு. ராம. கண்ணபிரான் அவர்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : ரம்யா நாகேஸ்வரன்

நூலாய்வுரையாளர்கள்: மாதங்கி, பிரஷாந்தன், அருள் குமரன் மற்றும் ஹூஸெய்ன்

ஏற்பாட்டாளர்கள் : நூலக வாரியம் மற்றும் நண்பர்கள்
அனுமதி: இலவசம்

Tuesday, January 09, 2007

உயரப்பறந்து ஒர் உலகப்பார்வை

நண்பர்களே வாருங்கள் என்னோடு. உயரப்பறந்து உலகைப் பார்த்து வரலாம். நமக்காகவே பரவெளி எல்லையற்றுப் பரந்து கிடக்கிறது. இறக்கைகளைப் பொருத்திக்கொள்ளுங்கள்! தொலைநோக்கிக் கருவியினை தோளில் மாட்டிக்கொள்ளுங்கள். உச்சிக்குப்போனதும் சிலவற்றை உற்றுநோக்கத் தேவைப்படும்.

புறப்பட்டாயிற்று! இன்னும் மேலே! இன்னும் மேலே பறக்கவேண்டும்! உலகம் உருட்டுப்பந்து அளவிற்கு வந்தவுடன் நிலை கொண்டு விடலாம். ஆம் வந்துவிட்டோம் சரியான இடத்திற்கு! பாருங்கள் அங்கே .. நிலமும் நீருமாகப் பிரிந்து கிடக்கிறது உலகப்பந்து. நீர்ப்பகுதியை விடச்சிறிய நிலப்பகுதி எத்தனை கண்டங்களாக எப்படிப் பிரிந்து கிடக்கிறது பாருங்கள். அதோ ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும். அதென்ன வேலிகள் போல் தெரிகிறதே. அதோ இந்தியா, பாகிஸ்த்தான், சீனா, சீனப்பெருஞ்சுவர் தெரிகிறது.

அதென்ன அங்கங்கே சிறுசிறு சலசலப்புகள்? சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
அண்டை நாடுகள் எப்போதும் அடித்துக்கொள்வார்கள் போலும். என்ன வெடிச்சத்தம் கேட்கிறதே. கைகால் உறுப்புக்களை இழந்து உதிரம் சொட்ட ஓடுகிறார்களே. அதோ அங்கே என்ன பூச்சி போல ஏதோ பறக்கிறதே. ஓ ஹெலிக்காப்டர் உணவுப்பொட்டலம் போடுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு. இதென்ன வேடிக்கை, குத்துப்பழி வெட்டுப்பழி என் அடித்துக்கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள்ளே மனிதநேயத்தோடு உதவிக்கொள்கிறார்கள். ஆச்சரியமாயில்லை?

இப்போது ஒரு கற்பனை செய்து பாருங்கள் இப்படி ..அந்த உலக உருண்டையை ஒரு மனித உருவமாக. கைகளையும் கால்களையும் நாடுகளாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உலக மனிதன் என்ன செய்கிறான் பாருங்கள். அவனுடைய வலது கையாலேயே அவன் கண்ணைக் குத்திக் கொள்கிறானே. அவனுடைய இடக்கையால் மருந்து போட்டுக்கொள்கிறான். நெஞ்சில் தன்னைத்தானே கீறிக்கொள்கிறானே. அவனே அடித்துக்கொள்வதும், பின் அவனே மருந்திட்டுக் கொள்வதும் ஆச்சரியமாயில்லை. ஒருவேளை மூளை பிசகியிருக்குமோ?

தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு நாடுகளை உற்றுப்பாருங்கள். இன்னும் அதிகதிகப் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும், அவற்றுக்குள்ளே அடித்துக்கொள்ளல்களையும் காண்பீர்கள். மொழியால் பிரிந்துகிடக்கிறார்கள். மதத்தால் பிரிந்துகிடக்கிறார்கள். நிறத்தால், கொள்கையால், பழக்கவழக்கங்களால், செய்யும் தொழிலால் பிரிந்து கிடக்கிறார்கள். ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? தொலைநோக்கியை இன்னும் நீட்டிப்பாருங்கள். அங்கே மேடையில் ஒருவன் பேசிக்கொண்டிருக்கிறான் பாருங்கள். அவன் பேச்சுக்குப் பலத்த கைதட்டு. அவன் இன்னும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறான் பாருங்கள். அப்படி என்ன சொல்கிறான்? ‘நாமே சிறந்தவர்கள். நம் இனமே சிறந்த இனம்’ என்கிறான். கூட்டம் சேர்கிறது. அடுத்த இனத்தால் நம் இனம் நசுக்கப்படுகிறது. பொங்கியெழுங்கள், போராடுங்கள் என்று முழங்குகிறான். அனைவருக்கும் இரத்தம் சூடேறுகிறது. பொங்கியெழுகிறார்கள். போராடுகிறார்கள். இப்படித்தான் அடித்துக்கொள்ளல்கள் ஆரம்பமாகின்றன. பின் அதுவே இனங்களுக்குள்ளே தீராப்பகையாகிறது. பிரிவுகளுக்குள் வெறுப்பினை வளர்த்துவிடும் வேடிக்கை இப்போது நாள்தோறும் நடக்கிற வாடிக்கையாகிவிட்டது.
தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ, சுயநலத்துக்காகவோ, பொதுநலத்துக்காகவோ, புகழுக்காகவோ, போட்டிக்காகவோ, பொறாமைக்காவோ அந்த வெறுப்பு வளர்க்கும் வேள்விகள் நிகழ்த்தப்படுகின்றன. மதங்களில் எந்த மதமும் அடித்துக்கொள்ளச் சொல்லவில்லை. எல்லா மதங்களும் அன்பு காட்டத்தான் சொல்கின்றன.

பிரிவுகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அது சாத்தியமா? பிரிவுகள் வளர்ச்சிக்காகவும் வசதிக்காகவும் தேவை. பின்னே என்ன செய்யவேண்டும்? ஒரு இனம் அடுத்த இனத்தை மதிப்பதும், ஒரு மதம் அடுத்த மதத்தை மதிப்பதும், பொதுவாகச்சொல்வோமானால் ஒரு பிரிவு அடுத்த பிரிவினை மதிப்பதும் எல்லை மீறாத பேச்சும் எழுத்தும், விட்டுக்கொடுத்தலும், ‘உலகம் ஒன்றே, உயிர்கள் யாவும் ஒன்றே’ என்கிற விழிப்புணர்வும்தான் இவ்வுலகை வாழவைக்கும் என்பதை உணர வேண்டும்.

அந்தக்கடமை சிந்திக்கத்தெரிந்த நம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. எதிரியையும் வெறுக்காத, எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளப் பழகுவோமா? நண்பர்களே

அந்தச் சிந்தனையோடு சிறகை மடக்கிக் கொள்ளுங்கள். பயணம் முடிந்தது. பத்திரமாய்த் தரையிறங்கி விட்டோம் நண்பர்களே!

Monday, January 08, 2007

படைப்புக்களால் பயன் உண்டா?

படைப்புக்களால் பயன் உண்டு. சிறுகதையோ, கவிதையோ, நாவலோ, சினிமாவோ படைப்பு எதுவாகிலும் அதன் தன்மையைப் பொருத்து வாசிப்பவருக்கு அல்லது அனுபவிப்பவருக்கு ஒரு தாக்கம் இருக்குமானால் அதுதான் பயன். நல்ல பயனாகவோ, கெட்ட பயனாகவோ இருக்கலாம். அந்தத் தாக்கம் அதன் தன்மையைப் பொருத்தும், பயனாளியின் தன்மையைப் பொருத்தும் வேறுபடலாம். சில மணித்துளிகளோ, சில மாதங்களோ அந்த தாக்கம் நீடிக்கலாம்.

நல்ல படைப்புக்கள் தொடர் சிந்தனையைத் தூண்டும். பல புதிய படைப்புக்களுக்கு அவை மூலங்களாக அமையலாம். இந்தப் பயன்களை நிகழ்காலத்தவருக்குக் கிடைக்கிற பயன்களாகக் கொள்ளலாம். இந்த வகையில் பார்த்தால் எதிர்காலப் பயன்களும் படைப்புக்களுக்கு உண்டு எனலாம். எப்படி? அவற்றை ஆவனங்களாகக் காக்கும் பட்சத்தில் அவை எழுதப்பட்ட காலத்தின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை யதார்த்தமாகப் படைக்கலாம். அல்லது மிகைப்படுத்தி மாறுபடுத்தியும் படைக்கலாம். அவை ஏற்படுத்தும் தாக்கம் கண்டிப்பாக அந்தச் சமூகத்தை பாதிக்கத்தான் செய்கின்றன. இதற்கு சமீபத்தில் சென்னையில் சிறுவன் ஒருவனைக் கடத்திக் கொன்ற 3 இளையர்களை உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் தங்கள் வாக்கு மூத்தில் 'சினிமாவைப் பார்த்தோம். கொன்றோம்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக முழுக்க படைப்பாளிதான் குற்றத்திற்குக் காரணம் என்று சொல்லவும் முடியாது. அதே நேரம் சொல்லாமல் இருக்கவும் முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. வன்முறை குறைக்கலாம். வரும் சினிமா அனைத்திலும் ஹீரோக்கள் எல்லாம் எத்தனை பல சாலிகளாகவும், ஈகோ பிடித்தவர்களாகவும் சித்தரிக்கிறார்கள்.

வெகுஜன ஊடகங்களான தொலைக்காட்சியும், சினிமாவும் இந்தச் சம காலச் சமுதாயத்தில் நல்ல அல்லது கெட்ட அல்லது இரண்டும் கலந்த ஒரு தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. படைப்பாளிகள் கவனத்தோடு படைக்க வேண்டும். அவர்களின் பலம் அவர்களே அறியாத பலம். அதனைக் கொண்டு சமுதாயம் மேம்படத் தேவையான படிப்புக்களைப் படைக்க வேண்டும்.

Saturday, January 06, 2007

நவீன கவிதைகள் - என் பார்வையில்

‘கவிதைகள்’ என்றவுடனே நம்மூளை ஏற்கனவே பல நிகழ்வுகள் நமக்குள் பதித்துச்சென்ற தடத்தை கையிலெடுத்துக்கொண்டு காத்திருக்கும். ‘மடக்கி மடக்கி எழுதப்படிருக்கும்’, ‘எதுகை மோனை இருக்கும்’, ‘சந்தம் இருக்கும்’, ‘ஓசைநயம் இருக்கும்’ என்றெல்லாம் ஞாபகங்கள் அலைமோதும். இந்நினைவுகளோடு நவீன கவிதைகளை உள்வாங்க முனைந்தால், அவற்றைப் பற்றிய உண்மை அறிதலைப் புறந்தள்ளி, தாக்குதல் தொடுக்கவோ, தள்ளிவைக்கவோதான் தயாராவோம்.

அந்த அளவுகோல்களைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுப்பார்த்தால் புதுக்கவிதைகளை நாம் புரிந்துகொள்ள முடியும். புரியாதது போலத் தெரிந்து பின் புரிய ஆரம்பிக்கும் போது புதுப்புது அர்த்தங்கள் தந்து ஒரு புது அனுபவத்தைத் தரும். அந்தச் சுகானுபவம் சிந்தனைத்தூண்டலாகி வாசகனைப் படைப்பாளியாக்கும் சாத்தியங்களும் உண்டு.

நவீனகவிதைகளைப் பற்றிப் பேசும் போது, ‘படிமம்’ என்றொரு பதத்தைப் பயன் படுத்துகிறார்கள். உருவகங்களைத்தான் படிமம் என்கிறார்கள். எல்லா உருவகங்களும் எடுபடுவதில்லை. சில படிமங்கள் அற்புதமாக இருக்கின்றன. சில நவீன கவிதைகள் வெறும் உருவகக்குவியலாக இருக்கின்றன. நவீன கவிதைகளின் வடிவத்தைப் பார்க்கின்ற போது பலர் பல உத்திகளைக் கையாள்கிறார்கள். வடிவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற போது சில நேரங்களில் கருத்து காலை வாரி விடுவதுண்டு.
உணர்வுகளால் உந்தப்பட்டு கவிதைகள் உருவாக வேண்டும். படைப்பாளிக்கு கலைநயம், மொழிஅழகு, உருவம் பற்றிய பிரக்ஞை இருக்க வேண்டும். அப்படி உருவாகும் கவிதைகள் தாக்கங்களை ஏற்படுத்தும்.

"செத்தாலும்" - சிவஸ்ரீயின் சிறுகதை

காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய பெண் படைப்பாளிகளுக்கான புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை பெற்றுள்ளது திருமதி சிவஸ்ரீ அவர்கள் எழுதிய "செத்தாலும்" சிறுகதை. இக்கதை காலச்சுவடு ஆகஸ்ட் 2006 இதழில் பிரசுரமாகியுள்ளது. சிங்கப்பூர் தமிழ் முரசு பத்திரிக்கையில் ( டிசம்பர் 24, 2006 ) முதல் பாதி பிரசுரமாகியுள்ளது. அடுத்த பாதி வருகிற ஞாயிறு ( ஜனவரி 7, 2007 ) வர இருக்கிறது.கதையின் கருவாக தற்கொலை" யினை ஆசிரியர் தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரியது. இக்கதையினைப் படிக்கும் எவரும் தப்பித் தவறிக்கூட தற்கொலை முடிவுக்குப் போகமாட்டார். அப்படி ஒருவேளை செத்தாலும் (கதைத்தலைப்பு) கதையில் கூறியுள்ளபடி சாக மாட்டார். அவ்வளவு அடர்த்தியாக கதையின் களம் அப்படி இப்படி நகராமல் "தற்கொலை" யினால் படும் அவசஸ்த்தைகளை அணுஅணுவாக இம்மி பிசகாமல் சொல்லியிருக்கிறார் சிவஸ்ரீ. சரளமான பேச்சு நடையில் அவஸ்த்தையை அனுபவித்த அந்தப் பெண்ணே கூறுவதாக அமைத்திருப்பது மிக மிக அருமை! இம்முயற்சியினால் படிக்கும் ஒவ்வொருவரும் தாமே அப்படி அவஸ்த்தைப் ப்ட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு தாக்கம் ஏற்படுகிறது.நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல சிறுகதை அனுபவம். தொடர்ந்து சிவஸ்ரீ இன்னும் பல படைப்புக்களை படைக்க வாழ்த்துவோம்!!

உலகில் குற்றங்கள் குறைய . . .

வணக்கம் வலைப்பதிவர்களே,

வருகைக்கு நன்றி. இந்த (2007) ஆண்டின் என் படைப்புக்களை இட இந்தப் பதிவினைத் துவக்கியிருக்கிறேன்.

முதல் சிந்தனையாக 'உலகில் குற்றங்கள் குறைய . . .' என்ன வழி? என ஆராய்கிறது இக்கட்டுரை.

குற்றவாளிகள் குறைந்தால் குற்றங்கள் குறையும். குற்றவாளிகள் எங்கிருந்து உருவாகிறார்கள்? கவனிக்கப்படாத குடும்பங்களிலிருந்துதான். எப்படி? குடும்ப வாழ்க்கை குலைந்துவிட்டது.

கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமானது. இப்போது தனிக்குடும்பமும் சிதைகிறது. கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள் வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. அப்படியே திறந்திருந்தாலும் எந்நேரமும் அங்கே தொலைக்காட்சியின் ஆட்சி. பேசிக்கொள்வதே அரிதாகிவிட்டது. குறுக்கீடுகள் கூடிவிட்டன. இயந்திரத் தனமான சுயநலம் மிகுந்த வாழ்க்கை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

எப்படி நிறுவனங்களைக் நிலை நிறுத்த நிர்வகிக்க அதிகாரிகள் அவசியமோ அதே போல, அதைவிட முக்கியமாக குடும்பத்தைக் கவனிக்கவும் அவசியம் ஒருவர் வேண்டும். அவர் அக்குடும்பத்தை அக்கறையோடு கவனித்து அன்பைப் பொழிந்து கோயிலாக்க வேண்டும். சமுதாயம் என்கிற கட்டடத்தின் அடிப்படைச் செங்கலான குடும்பம் அக்கறையோடு கவனிக்கப்பட்டால் குற்றவாளிகள் உருவாகமாட்டார்கள்.

ஆனால் இன்றைய நிலை என்ன? பிள்ளைகளைக் கிரச்சில் விட்டுவிடுகிறோம். பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டு விடுகிறோம். வீட்டு வேலைகளுக்குப் பணியாட்கள். தம்பதியராக வேலைக்குச் சென்று திரும்புகிறோம். நிறுவனங்களில் வேலைகளைப் பிரித்து அவுட்சோர்சிங் விடுவது போல குடும்பத்தையும் பிரித்து அவுட்சோர்சிங் விட்டுவிட்டோம். இந்தச் சிந்தனை மனசுக்குள் கவிதையாக மலர்ந்தது இப்படி. ,

வாழ்க்கையிலுமா அவுட்சோர்சிங்?
-----------------------------------------

நிறுவனங்களில்
வேலைகள் பிரித்து
வெளியார்க்குக் குத்தகை
விடும் அவுட்சோர்சிங் முறையை
வாழ்க்கைக்கும்
வகுத்துக்கொண்டதுதான்
வருத்தமளிக்கிறது!

மனிதன்
வாழ்க்கையைப் பிரித்து
பெற்றோர் பேணுதலை முதியோர் இல்லங்களுக்கும்
பிள்ளை வளர்த்தலைப் பிள்ளைக் காப்பகங்களுக்கும்
பிரித்துக் கொடுத்து
அன்பு காட்டுதல் முதல் அரவணைப்பது வரை
அனைத்தையுமே 'அவுட் சோர்சிங்' விட்டுவிட்டான்!!

கணவனும் மனனவியும்
காலை முதல் மாலை வரை
அலுவலகம் சென்றுவிட்டு
இரவுத் தங்கலுக்காக மட்டுமே
இல்லம் திரும்புவதால்
வீடுகள் எல்லாம்
'தங்கும் விடுதிகளா'கிக் கொண்டிருக்கின்றன.
இதனால் வங்கிக் கணக்குகள்
வானம் தொட்டாலும்
பேட்டை தோறும் உள்ள
பூட்டிய வீடுகள்
அன்பு வளர்க்கும்
சாத்தியக் கூறுகள்
சத்தியமாய் இல்லைதானே!

நிலை மாற என்ன செய்ய வேண்டும்? பெண்கள் குடும்பத்தைக் கவனித்துக் கோயிலாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் பெரியவர்களானதும், அல்லது பிள்ளைகள் பிறக்குமுன் சில காலம் வேலைக்குச் செல்லலாம்.
ஆண்களும் வீட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆக யாராவது ஒருவர் வீட்டைக் கவனிக்க வேண்டும். தொலைக்காட்சி பயன்பாட்டில் கட்டுப்பாடு வேண்டும்.

சமூகத்தோடு ஒன்றி வாழப் பழக வேண்டும். பல இனத்தாரோடும் இனக்கமாகப் பழகவேண்டும். உறவுகளோடும் நண்பர்களோடும் பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சக மனிதர்களோடு அன்போடு பழக வேண்டும். அன்பு அகிலமெங்கும் ஆறாகப் பெருகி ஓடவேண்டும்.

என்ன நண்பர்களே இதனையே நம் 2007ம் ஆண்டின் தீர்மாணமாக எடுத்துக் கொள்வோமா?